Sunday, 27 October 2013

அதிகாரி தகவல் கூடங்குளத்தில் 15 நாட்களில் 500 மெகாவாட் மின் உற்பத்தி...!

 கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 15 நாட்களில் 500 மெகாவாட் மின்சாரமாக உயர்த்த அணு மின் நிலைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் நடந்து வருவதாக வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இந்தியா & ரஷ்ய கூட்டு முயற்சியுடன் யி13 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் கடந்த ஜூலை 13ம் தேதி இரவு அணுப்பிளவு தொடங்கியது. இந்த முடிவுகளை கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். எனினும் அணு உலையில் வெளிப்படும் வெப்ப ஆற்றல் நீராவி குழாய்கள் வழியாக செல்லும் வால்வுகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி தாமதமாகி வந்தது.


 கடந்த 22ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது. 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் சோதனை முடிவுகளுக்காக மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது.  3 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு 9.43 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இந்த மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. இரவு 10.20 மணிக்கு மின்சார உற்பத்தி 200 மெகாவாட்டை எட்டியது. நேற்று சராசரியாக 200 முதல் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கூறுகையில், “கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த மின் உற்பத்தியை படிப்படியாக அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை அதிகாரிகள் குழு கண்காணித்து வருகிறது. இந்த மின் உற்பத்தியை 15 நாட்கள¤ல் 500 மெகாவாட்டாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக பல்வேறு ஆய¢வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்“ என்றார். டிசம்பர் இறுதிக்குள் 1000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என அணு மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தகுதி தேர்வில் தவறான விடை: தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை; ஐகோர்ட்டு உத்தரவு...!


தாவரவியல் ஆசிரியர் தகுதி தேர்வில், தவறான விடைக்கு மதிப்பெண் அளித்ததால், 193 பணியிடங்களில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பி.தேன்மொழி (வயது 34). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
நான், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவள். எம்.எஸ்சி. (தாவரவியல்), பி.எட். பட்டங்கள் பெற்றுள்ளேன். ஆசிரியர் தேர்வு வாரியம், 193 முதுநிலை தாவரவியல் உதவி பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு கடந்த 21–7–2013 அன்று நடத்திய எழுத்து தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினேன்.
இந்த தேர்வு முடிவு 11–10–2013 அன்று வெளியானது. அதில், எனக்கு 93 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த தேர்வில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ‘கட் ஆப்‘ மதிப்பெண் 94 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து என் விடைத்தாளை சரிபார்த்தபோது, நான் அளித்த சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கவில்லை என்பது தெரியவந்தது.
இந்த தேர்வில், கேள்வி எண்கள் 31–க்கு சரியான விடைக்கு மதிப்பெண் வழங்காமலும், தவறான விடைக்கு மதிப்பெண் வழங்கப்பட்டும் உள்ளது. நான் அளித்த சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தால், ‘கட் ஆப்’ மதிப்பெண் 94 பெற்று, ஆசிரியர் பணிக்கு தகுதியானவராக இருந்து இருப்பேன்.
இதுகுறித்து, 31–வது கேள்விக்கு சரியான விடைகளை ஆதாரங்களுடன் குறிப்பிட்டு, மனுவாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினேன்.
இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே சரியான விடை அளித்த எனக்கு மதிப்பெண் வழங்கவும், ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்றுவிட்டதால், எனக்கு ஆசிரியர் பணி வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜி.அன்பரசு ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
ஆசிரியர் தகுதி தேர்வில், தாவரவியல் பாடத்தில் 31–வது கேள்விக்கு சரியான விடையை மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இது சரியான விடைதான் என்பதை 11–ம் வகுப்பு தாவரவியல் பாடபுத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதையும் ஆதாரமாக தாக்கல் செய்துள்ளார்.
இப்போது, மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கினால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு நிர்ணயம் செய்துள்ள ‘கட் ஆப்’ மதிப்பெண்ணை அவர் பெற்றுவிடுவார்.
எனவே, மனுதாரரை சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுக்க வேண்டும். 193 தாவரவியல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், ஒரு இடத்தை நிரப்பாமல் வைத்திருக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.



குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: நீத்தார் பெருமை.


குறள் 22: 
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

சாலமன் பாப்பையா உரை:

ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

பரிமேலழகர் உரை:

துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும். (முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.).