Thursday, 31 October 2013

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.



குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: நீத்தார் பெருமை.

குறள் 26: 

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

பரிமேலழகர் உரை:

செயற்கு அரிய செய்வார் பெரியர் - ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்;செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். (செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம்,நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய, 'நாலிரு வழக்கின் தாபதபக்கம்'(புறப்பொருள் வெண்பாமாலை, வாகைத்திணை14) என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.).

Wednesday, 30 October 2013

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.



குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: நீத்தார் பெருமை.


குறள் 25: 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

சாலமன் பாப்பையா உரை:

அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

பரிமேலழகர் உரை:

ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முதுநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான, ஆசிரியர் தகுதித் தேர்வை கடந்த ஜுலை மாதம் டி.ஆர்.பி., நடத்தியது. இதில் தமிழ் பாடத்திற்கு நடத்தப்பட்ட தேர்வில், வினாத்தாளில் அதிகளவிலான பிழைகள் இருந்தன.

எனவே, பெரிய குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ் பாடத்திற்கான தேர்வை ரத்துசெய்து, அப்பாடத்திற்கு மட்டும் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது.

ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மறுதேர்வு நடத்துமாறு அளிக்கப்பட்ட உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்தது.