சென்னை: கோவையில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த செம்மொழி மாநாட்டில் ரூ. 200 கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்துமாறு தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ரமேஷ் பாபு என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது...
தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியின்போது 2010ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டிற்கு ரூ.380 கோடி செலவு செய்ததாக அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
பின்னர் சட்டசபையில் செம்மொழி மாநாடு சம்பந்தமாக விவாதம் நடந்த போதும் ரூ.380 கோடி செலவு செய்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செம்மொழி மாநாட்டிற்கான செலவு தொகை எவ்வளவு என்று தமிழக அரசிடம் விண்ணப்பம் செய்தேன். இதற்கு பதில் அளித்த தமிழக அரசு செம்மொழி மாநாட்டிற்கு ரூ.150 கோடி செலவு செய்ததாக கூறியது.
அதே போல 2010-2011ஆம் ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கையில் செம்மொழி மாநாட்டிற்கு ரூ.160 கோடி செலவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, செம்மொழி மாநாட்டில் குறைந்தது ரூ.200 கோடி வரை ஊழல் நடந்திருப்பது தெரிய வந்தது. இது சம்பந்தமாக கடந்த ஏப்ரல் மாதம் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தேன்.
அதில் ரூ.200 கோடி ஊழல் செய்ததாக அப்போதைய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தேன். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதந்திரம், இந்தப் புகாரில் முகாந்திரம் இருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்தலாம் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment