Showing posts with label தினம் ஒரு திருக்குறள். Show all posts
Showing posts with label தினம் ஒரு திருக்குறள். Show all posts

Friday, 11 October 2013

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.


குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: வான்சிறப்பு.


குறள் 11: 

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.


சாலமன் பாப்பையா உரை:

உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

பரிமேலழகர் உரை:

[அஃதாவது ,அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து. ('நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்.).

Thursday, 10 October 2013

தினம் ஒரு திருக்குறள்


குறள் பால்: அறத்துப்பால்.


குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: கடவுள் வாழ்த்து.

குறள் 10:


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

மு.வ உரை:

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை:

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

பரிமேலழகர் உரை:

இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன..

Tuesday, 8 October 2013

தினம் ஒரு திருக்குறள்


குறள் பால்: அறத்துப்பால்.


குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: கடவுள் வாழ்த்து.


குறள் 9:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.


சாலமன் பாப்பையா உரை:
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

பரிமேலழகர் உரை:

கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.).

Monday, 7 October 2013

தினம் ஒரு திருக்குறள்


குறள் பால்: அறத்துப்பால்.


குறள் இயல்: பாயிரவியல். 


அதிகாரம்: கடவுள் வாழ்த்து.


குறள் 8:


அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.


சாலமன் பாப்பையா உரை:

அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.


பரிமேலழகர் உரை: 
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.).

Sunday, 6 October 2013

தினம் ஒரு திருக்குறள்



குறள் பால்: அறத்துப்பால்.


குறள் இயல்: பாயிரவியல். 


அதிகாரம்: கடவுள் வாழ்த்து.




குறள் 7:


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.


சாலமன் பாப்பையா உரை:

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.


பரிமேலழகர் உரை: 

தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. ("உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.).

Friday, 4 October 2013

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.


குறள் இயல்: பாயிரவியல். 


அதிகாரம்: கடவுள் வாழ்த்து.



குறள் 6:


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.


சாலமன் பாப்பையா உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.

பரிமேலழகர் உரை:

பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது).

Wednesday, 2 October 2013

தினம் ஒரு திருக்குறள்


குறள் பால்: அறத்துப்பால்.


குறள் இயல்: பாயிரவியல். 


அதிகாரம்: கடவுள் வாழ்த்து.


குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

சாலமன் பாப்பையா உரை:

கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

பரிமேலழகர் உரை: 

இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்).

Tuesday, 1 October 2013

தினம் ஒரு திருக்குறள்



குறள் பால்: அறத்துப்பால்.

குறள் இயல்: பாயிரவியல். 


அதிகாரம்: கடவுள் வாழ்த்து.




குறள் 4: 

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

சாலமன் பாப்பையா உரை:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.


பரிமேலழகர் உரை:
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.).

Monday, 30 September 2013

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.

குறள் இயல்: பாயிரவியல். 

அதிகாரம்: கடவுள் வாழ்த்து.

குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்.


சாலமன் பாப்பையா உரை:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.


பரிமேலழகர் உரை:
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் -எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்).

Sunday, 29 September 2013

தினம் ஒரு திருக்குறள்


குறள் பால்: அறத்துப்பால்.

குறள் இயல்: பாயிரவியல். 

அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
குறள் 2: 
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

பரிமேலழகர் உரை:
கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.

மு.வ உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

Saturday, 28 September 2013

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.

குறள் இயல்: பாயிரவியல். 

அதிகாரம்: கடவுள் வாழ்த்து.


குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


பரிமேலழகர் உரை:
அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க. 
விளக்கம்: எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.