Saturday, 26 October 2013

வியக்கவைக்கும் வைக்கோல் குக்கர்...!

'வைக்கோல் மூலம் வீட்டில் சமையல் எரிபொருளை மிச்சப்படுத்தலாம்'' என்கிறார் கோபிச்செட்டிபாளையம், ஸ்ரீ நேஷனல் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து.
''எனக்கு அறிவியல் மீது ஆர்வம் அதிகம். அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை நிறையப் படிப்பேன். 'அடிக்கடி பெட்ரோல், சிலிண்டர் விலையை ஏத்திடுறாங்க. குடும்பத்தை நடத்துறது பெரிய சவாலா இருக்கு’னு அப்பாவும் அம்மாவும்  பேசிக்குவாங்க. இதுக்கு நாம் ஏதாவது செய்யலாமேனு நினைச்சேன். அப்போ உருவானதுதான் இந்த வைக்கோல் குக்கர்'' என்ற ரிஷி சித்து, அதன் செய்முறையை விளக்கினார்.
''சாதம் சமைக்க, பாத்திரத்தில் தண்ணியைக் கொதிக்கவெச்சு, அதில் அரிசியைப் போடுவோம். அது முழுமையா வேகும் வரை காஸ் அடுப்பு எரியும். அப்படி இல்லாமல், ஒரு கொதிவந்ததும் அந்தப் பாத்திரத்தை எடுத்து, வைக்கோல் நிரப்பப்பட்ட அட்டைப் பெட்டியில நடுவில் வைக்கணும். பிறகு, வைக்கோலை அடைச்சு செய்த ஒரு தலையணையால் மூடிடணும். வைக்கோல் என்பது திறன் குறைந்த ஒரு வெப்பக் கடத்தி. அதனால், அது வெப்பம் வெளியே போகாமல் பாதுகாக்கும். அந்த வெப்பத்தில் உள்ளே இருக்கும் அரிசி, நாம குக்கரில் சமைக்கும் நேரத்தில் வெந்துவிடும். இதனால், எரிபொருள் மிச்சம்' என்றார் ரிஷி.
சாதம் மட்டுமல்ல; பருப்பு, சுண்டல் மற்றும் அனைத்து விதமான காய்கறிகளையும் இப்படி வைக்கோல் குக்கர் மூலம் வேகவைக்கலாம்.
''இதனால், நேரம் மற்றும் எரிபொருள் மிச்சப்படும்;  ஆரோக்கியமானதும்கூட. முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தது. குக்கரில் சமைக்கிறப்போ, கஞ்சி வெளியே போக வாய்ப்பு இல்லாததால் அரிசியோட கலந்துடுது... இது சர்க்கரை நோய்க்குக் காரணமாயிடுது. ஆனா, இந்த முறையில் நாம் கஞ்சியைத் தனியே வடிச்சுக்கலாம். சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும்'' என்கிறார்.
ரிஷி சித்துவின் இந்தக் கண்டுபிடிப்பு, டெல்லியில் நடைபெறும் பாலஸ்ரீ விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட 15 சிறந்த கண்டுபிடிப்புகளில்  ஒன்றாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
''விருது கிடைப்பதைவிட, இதைப் பார்த்து நூறு பேர் பயன்படுத்தினாலும் கணிசமான அளவு எரிபொருள் மிச்சப்படுமே. நாட்டுக்கு செய்யும் நல்ல விஷயமா அதை நினைக்கிறேன்'' என்று 'பெரிய மனுஷ’த் தோரணையில் பொதுநல அக்கறையுடன் சொல்கிறார் ரிஷி சித்து.

சிறகுகளின்  வாழ்த்துகள்...!

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு...!

ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு
இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர்.
அதில் 7 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 5 கிரகங்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கிரகம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கிரகங்களும் உள்ளன.
இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார்.

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு இரண்டு தேர்வுகள் எழுதவேண்டும்: இந்திய மருத்துவக் கழகம் தகவல்

மருத்துவப் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றபின் மேற்படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் தற்போது ஒரு நுழைவுத் தேர்வினை எழுதுகின்றனர். ஐந்தரை வருட காலம் கொண்ட இளநிலைக் கல்வியின் கடைசி வருடம் மாணவர்களின் பயிற்சிக் காலமாகக் கருதப்படுகின்றது. இந்த வருடத்தில்தான் அவர்கள் தலைமை மருத்துவரின் கண்காணிப்பில் நோயாளிகளைப் பரிசோதிக்கத் துவங்குகின்றார்கள்.

இந்த பயிற்சிக் காலம் முடிந்தவுடன் மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது. எனவே, மாணவர்கள் நோயாளிகளைக் கவனிப்பதைவிட மேற்படிப்புக்கான தங்களின் தயாரிப்புப் பணிகளிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர் என்று ஒரு குற்றச்சாட்டு தென்படுகின்றது. அது மட்டுமின்றி, இந்தியாவில் இதுநாள் வரை, மருத்துவப் படிப்பு முடிந்தபின் நேரடியாக மருத்துவத் தொழிலை மேற்கொள்ளுவதற்கு மருத்துவர்கள் எந்த தகுதித் தேர்வையும் எழுத வேண்டியதில்லை. இதனால், அவர்களின் திறமைகளோ, கல்வி மற்றும் அவர்களின் அனுபவ அறிவு போன்றவை திறனாய்வு செய்யப்படாமலே தொழில் துவங்கும் நிலை இருந்து வருகின்றது.

இந்தக் குறைகளை நீக்க வேண்டி சமீபத்தில் நடைபெற்ற இந்திய மருத்துவக் கவுன்சில் கூட்டம் ஒன்றில் இளநிலை மாணவர்கள் தங்களது நான்கரை வருடப் படிப்பை முடித்தபின் மேற்படிப்பிற்கு வேண்டிய நுழைவுத்தேர்வினை எழுத வேண்டும் என்றும், கடைசி வருட பயிற்சி காலத்தை முடித்தபின்னர் மருத்துவத் தொழிலை மேற்கொள்ள உதவும் தகுதித் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.  

கடைசி ஒரு வருட மருத்துவப்பயிற்சி என்பது மாணவர்களை நேரடியாக மக்களுடன் தொடர்பு கொள்ள வைக்கும் ஒரு காலமாகும்.இந்தக் காலத்தில் அவர்கள் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி தங்களின் அனுபவ அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக நுழைவுத்தேர்விற்காகத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள இந்த நேரத்தை செலவிடுவது அவர்களின் கல்வி முறையைப் பாதிக்கும் என்று கர்நாடகா மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர்.சிக்கநஞ்சப்பா கூறுகின்றார். 

பாடத்திட்டங்களை முடித்த உடனே மேற்படிப்பு நுழைவுத்தேர்வையும் எழுதிவிடுவது மாணவர்களுக்கு எளிதாக இருக்கும் என்று அதிகாரிகளும் கருதுகின்றனர். மேலும் முதுநிலை நுழைவுத் தேர்வுகள் இணையதளம் மூலம் நடைபெறவும், சிறப்பு மருத்துவப்பிரிவுகளில் சேர விரும்புவோர் தாங்கள் விரும்பும் துறையைத் தேர்ந்தெடுக்கும் வசதியும் இந்த தேர்வுகளில் கொண்டுவரப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.