Saturday, 26 October 2013

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு இரண்டு தேர்வுகள் எழுதவேண்டும்: இந்திய மருத்துவக் கழகம் தகவல்

மருத்துவப் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றபின் மேற்படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் தற்போது ஒரு நுழைவுத் தேர்வினை எழுதுகின்றனர். ஐந்தரை வருட காலம் கொண்ட இளநிலைக் கல்வியின் கடைசி வருடம் மாணவர்களின் பயிற்சிக் காலமாகக் கருதப்படுகின்றது. இந்த வருடத்தில்தான் அவர்கள் தலைமை மருத்துவரின் கண்காணிப்பில் நோயாளிகளைப் பரிசோதிக்கத் துவங்குகின்றார்கள்.

இந்த பயிற்சிக் காலம் முடிந்தவுடன் மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது. எனவே, மாணவர்கள் நோயாளிகளைக் கவனிப்பதைவிட மேற்படிப்புக்கான தங்களின் தயாரிப்புப் பணிகளிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர் என்று ஒரு குற்றச்சாட்டு தென்படுகின்றது. அது மட்டுமின்றி, இந்தியாவில் இதுநாள் வரை, மருத்துவப் படிப்பு முடிந்தபின் நேரடியாக மருத்துவத் தொழிலை மேற்கொள்ளுவதற்கு மருத்துவர்கள் எந்த தகுதித் தேர்வையும் எழுத வேண்டியதில்லை. இதனால், அவர்களின் திறமைகளோ, கல்வி மற்றும் அவர்களின் அனுபவ அறிவு போன்றவை திறனாய்வு செய்யப்படாமலே தொழில் துவங்கும் நிலை இருந்து வருகின்றது.

இந்தக் குறைகளை நீக்க வேண்டி சமீபத்தில் நடைபெற்ற இந்திய மருத்துவக் கவுன்சில் கூட்டம் ஒன்றில் இளநிலை மாணவர்கள் தங்களது நான்கரை வருடப் படிப்பை முடித்தபின் மேற்படிப்பிற்கு வேண்டிய நுழைவுத்தேர்வினை எழுத வேண்டும் என்றும், கடைசி வருட பயிற்சி காலத்தை முடித்தபின்னர் மருத்துவத் தொழிலை மேற்கொள்ள உதவும் தகுதித் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.  

கடைசி ஒரு வருட மருத்துவப்பயிற்சி என்பது மாணவர்களை நேரடியாக மக்களுடன் தொடர்பு கொள்ள வைக்கும் ஒரு காலமாகும்.இந்தக் காலத்தில் அவர்கள் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி தங்களின் அனுபவ அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக நுழைவுத்தேர்விற்காகத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள இந்த நேரத்தை செலவிடுவது அவர்களின் கல்வி முறையைப் பாதிக்கும் என்று கர்நாடகா மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர்.சிக்கநஞ்சப்பா கூறுகின்றார். 

பாடத்திட்டங்களை முடித்த உடனே மேற்படிப்பு நுழைவுத்தேர்வையும் எழுதிவிடுவது மாணவர்களுக்கு எளிதாக இருக்கும் என்று அதிகாரிகளும் கருதுகின்றனர். மேலும் முதுநிலை நுழைவுத் தேர்வுகள் இணையதளம் மூலம் நடைபெறவும், சிறப்பு மருத்துவப்பிரிவுகளில் சேர விரும்புவோர் தாங்கள் விரும்பும் துறையைத் தேர்ந்தெடுக்கும் வசதியும் இந்த தேர்வுகளில் கொண்டுவரப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment