Friday, 1 November 2013

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.



குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: நீத்தார் பெருமை.

குறள் 27: 

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

சாலமன் பாப்பையா உரை:

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

பரிமேலழகர் உரை:

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம். (அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவிஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.).

Thursday, 31 October 2013

ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவினை வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது....!

ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவினை வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வு நடத்தி வருகிறது.

இந்த தகுதி தேர்வு, இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் நடத்தப்படுகிறது. ஆனால் ஆந்திரா உள்ளிட்ட 14 மாநிலங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.

எனவே தமிழகத்திலும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த ஆசிரியர் தேர்வு வாரியம், ‘தகுதியான, திறமையான ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என்பதற்காக தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது’ என்று கூறியிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பழனிமுத்து ஆஜராகி, ‘கடந்த ஆகஸ்டு மாதம் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வின் விடைத்தாள்களை திருத்தும் பணி முடிந்துவிட்டது. தேர்வின் முடிவினை, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்க உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதம் செய்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இந்த மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 18–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதேநேரம், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள், அதைத்தொடர்ந்து நடைபெறும் பணி நியமனம் ஆகியவை இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’ என்று உத்தரவிட்டனர்.

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.



குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: நீத்தார் பெருமை.

குறள் 26: 

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

பரிமேலழகர் உரை:

செயற்கு அரிய செய்வார் பெரியர் - ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்;செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். (செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம்,நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய, 'நாலிரு வழக்கின் தாபதபக்கம்'(புறப்பொருள் வெண்பாமாலை, வாகைத்திணை14) என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.).