Monday, 23 September 2013

மும்பையில் விதவை பெண்ணை மிரட்டி 9 பேர் கற்பழிப்பு: 5 பேர் கைது

மராட்டிய மாநிலம் சதாராவை சேர்ந்தவர் சங்கீதா (வயது40, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் இறந்துவிட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி தனது 2 குழந்தைகளுடன் மும்பை வந்தார். 

காகிதம், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்த சங்கீதாவிற்கு, முலுண்டு அமர்நகரை சேர்ந்த டெம்போ டிரைவர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இதனையடுத்து தினமும் இரவில் அந்த டெம்போவிலேயே தனது குழந்தைகளுடன் தூங்கிவந்தார். வழக்கம்போல் நேற்று சங்கீதா டெம்போவில் தூங்கிக்கொண்டிருந்தார். 

அப்போது நள்ளிரவு டெம்போ டிரைவர் தனது நண்பர் ஒருவருடன் வந்து சங்கீதாவை எழுப்பி தன்னுடன் வரும்படி அழைத்தார். இதற்கு சங்கீதா மறுப்பு தெரிவித்தார். உடனே 2 பேரும் டெம்போவில் ஏறி சங்கீதாவை மிரட்டி கற்பழித்தனர். 

இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் கவனித்துக் கொண்டிருந்தனர். பின்னர் டெம்போ டிரைவரும், அவரது நண்பரும் சென்ற பிறகு அந்த 2 பேரும் சங்கீதா அருகே சென்றனர். அவரை மிரட்டி அருகில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக கற்பழித்தனர். 

பின்னர் அந்த வழியாக வந்த மேலும் 5 பேர் கொண்ட கும்பல் சங்கீதாவை அருகில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்கா காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்றது. 5 பேரும் காட்டுமிராண்டிதனமாக சங்கீதாவை கற்பழித்து அங்கேயே விட்டு விட்டனர். 

இந்த நிலையில் காலையில் காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த சங்கீதா அலங்கோலமான நிலையில் முல்லுண்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீசாரிடம் தன்னை 9 பேர் சீரழித்து விட்ட கதையை கூறி கதறி அழுதார். உடனே போலீசார் அவருக்கு மாற்று உடை கொடுத்து மருத்துவ பரிசோதனை மற்றும் முதலுதவி சிகிச்சைக்காக நாக்பாடா போலீஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் மகேஷ் குரே முல்லுண்டு போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரித்தார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

இதற்கிடையே, முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சங்கீதா போலீசாருடன் சென்று தான் கற்பழிக்கப்பட்ட இடங்களை அடையாளம் காட்டினார். அங்கு கிடந்த ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். சங்கீதா கொடுத்த அடையாளத்தின் பேரில் முல்லுண்டு பகுதியை சேர்ந்த அஜய் மகாவீர், மகேஷ் ராமசந்திரா, வாகித் கயூம் சேக், வசிம் சமத் சேக், தஸ்தகீர் அப்துல் கான் ஆகிய 5 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். 

போலீஸ் விசாரணையில், அவர்கள் 5 பேரும் சங்கீதாவை கற்பழித்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து 5 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக நாக்பாடா போலீஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

பின்னர் அவர்களை விடுமுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வருகிற 30–ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

சமீபத்தில் மும்பையில் பாழடைந்த சக்தி மில் வளாகத்தில் 23 வயது பத்திரிகை பெண் புகைப்பட நிபுணர், 18 வயது பெண் டெலிபோன் ஆபரேட்டர் ஆகியோர் கும்பல் கற்பழிப்புக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த அதிர்வலை அடங்குவதற்கு முன் மற்றொரு கும்பல் கற்பழிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment