Monday, 23 September 2013

மெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''

மதுரை : குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.
 குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும். 

எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும். எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும். எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும். 

எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும், எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம். 

இந்த  7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம். 

 தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.

No comments:

Post a Comment