Thursday 17 October 2013

ஸ்விஸ் வங்கிகளின் ரகசிய திரைகள் விலகுகின்றன: முதலீட்டாளர்களின் கருப்புப்பண விபரங்களை வழங்க ஒப்புதல்

சுவிட்சர்லாந்து வங்கி உள்பட வெளிநாட்டில் உள்ள பல வங்கிகளில் இந்தியாவைச் சேர்ந்த பலர் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்து உள்ளனர். அந்தப் பணத்தை மீட்டு, இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று எதிர் கட்சிகள் உள்பட பலரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள். 

இதைத்தொடர்ந்து, வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி உள்ளவர்களின் பட்டியலை மத்திய அரசு கேட்டது. இதில் சில முதல் கட்ட தகவல்கள் மட்டுமே கிடைத்தது. அதன் அடிப்படையில், கறுப்பு பணத்தை மீட்கவும், அதை பதுக்கியவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் மத்திய அரசு முடிவு செய்தது. 

ஆனால், இந்தியாவும், வெளிநாடுகளும் ஏற்கனவே செய்து கொண்டுள்ள இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தத்தின்படி இந்த கறுப்பு பணத்தை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தெரிய வந்தது. ஆகவே, கறுப்பு பணத்தை எப்படி மீட்டுக் கொண்டு வருவது என்று மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வந்தது. 

இதற்கிடையே, சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கிய இந்தியர்களின் பட்டியல் அந்த வங்கியின் ஆதாரங்களில் (டேட்டா) இருந்து கள்ளத்தனமாக சேகரிக்கப்பட்டது. அதில் இருந்து சுமார் 700 இந்தியர்கள் ரூ.12 ஆயிரத்து 740 கோடிக்கு கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. சர்வதேச இரட்டை வரி விதிப்பு கொள்கை மற்றும் ஒப்பந்தத்தின்படி அந்த கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவதில் சிக்கல் உள்ளதால், மாற்று ஏற்பாட்டை வருமானவரி இலாகா யோசித்தது. 

அதன்படி, கறுப்பு பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்கள், அதை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒப்படைத்தால், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கலாம் என்று பரிசீலித்து வருகிறது. அத்துடன் அவர்களின் பெயர் விவரங்களை வெளியிடுவதில்லை என்றும், அவர்கள் மீது எந்த கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் வருமானவரி இலாகா பரிசீலித்து வருகிறது. 

இந்திய அரசின் நெருக்கடியையடுத்து ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

2011ல் 14 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இந்தியர்களின் முதலீடு 2012ல் 9 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது.

இந்தியாவை போலவே உலகின் உள்ள பல்வேறு நாடுகளும் ஸ்விஸ் வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள கருப்புப் பண விபரங்களை தங்கள் நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று ஸ்விட்சர்லாந்து அரசை வற்புறுத்தி வந்தன.

இதனையடுத்து, இந்தியா உள்பட 58 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாடு என்ற அமைப்புடன் ஸ்விட்சர்லாந்து அரசு ஒரு உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளது.

பாரிசை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் வேண்டுகோளின்படி இதன் உறுப்பு நாடுகள் கேட்கும் விபரங்களை ஸ்விஸ் வங்கிகளிடமிருந்து பெற்று இனி ஸ்விட்சர்லாந்து அரசு அந்நாடுகளுக்கு வழங்கும் என்று இந்த உடன்படிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment