Monday, 28 October 2013

மெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''

குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.

குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.

எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும். எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும். எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.

எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும், எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.

இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்.

தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.

சிறப்பு முகாம்கள் முடிவடைந்தன வாக்காளர் பட்டியலில் சேர வரும் 31ம் தேதி கடைசி நாள்

 வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் முடிவடைந்தது. 2014 ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, வரைவு வாக் காளர் பட்டியல் (சிறப்பு சுருக்க முறை திருத்தம்) தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டு, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்கள்,



 வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தாசில்தார் அலுவலகங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்ய அக்டோபர்  6, 20, மற்றும் 27 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் அதாவது, மாநிலம் முழுவதும் 60,418 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தது. மக்கள் ஆர்வமுடன் விண்ணப்ப படிவங்களை வழங்கினர். 

சில வாக்குச்சாவடி மையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர். பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடம் மாற்றம் செய்வதற்கான படிவங்கள் அங்கேயே வழங்கப்பட்டன. இதனால், படிவங் களை பெற்றவர்கள் அங்கேயே பூர்த்தி செய்து அளித்தனர்.

இந்த படிவங்கள் 31ம் தேதி வரை ஏற்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி வெளியிடப்படுகிறது. அதை தொடர்ந்து புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை ஜனவரி 25ம் தேதி வழங்கப்படும். வாக்கு சாவடி அமைவிடங்கள், அந்தந்த மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை( கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி) ஆன்லைன் மூலம் 1,27,969 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதே போன்று வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில், நேரடியாக சென்று பெயர் சேர்க்க 12,68,717 பேரும், பெயரை நீக்க 49,190 பேரும், திருத்தம் செய்ய 1,59,524 பேரும், தொகுதி விட்டு தொகுதி மாற 60,687 பேரும் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். பூர்த்தி செய்த படிவங்கள் வருகிற 31ம் தேதி வரை ஏற்கப்படும்.

அதன் பின்னர், விண்ணப்பங்கள் மீது அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து வாக்குசாவடி நிலை அலுவலர் வீடு, வீடாக சென்று விசாரணை மேற்கொள்வார். அதன் பின்னர், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். புதிதாக எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரம் இன்று அறிவிக்கப் படும்.  இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.

தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்.



குறள் இயல்: பாயிரவியல். 



அதிகாரம்: நீத்தார் பெருமை.

குறள் 23: 
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

சாலமன் பாப்பையா உரை:

இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.

பரிமேலழகர் உரை:

இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).