தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 பிரதானத் தேர்வை 84 சதவீதம் பேர் எழுதியதாக தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. இப்போது காலியாகவுள்ள 25 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. பிரதானத் தேர்வுக்கு ஆயிரத்து 372 பேர் தேர்வு பெற்றிருந்தனர். சென்னையில் பிரதானத் தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. 14 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வினை 115 பேர் எழுதவில்லை. மொத்தம் 84 சதவீதம் பேர் எழுதியதாக தேர்வாணையத் தலைவர் தெரிவித்தார்.
தேர்வு எப்படி இருந்தது? குரூப் 1 பிரதானத் தேர்வு மூன்று நாள்கள் நடைபெறுகின்றன. முதல் நாள் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. அதில் 3 மதிப்பெண் கேள்விகள் 30-ம், 8 மதிப்பெண் கேள்விகள் 15-ம், 15 மதிப்பெண் கேள்விகள் ஆறும் கேட்கப்பட்டிருந்தன.
கேள்விகள் அனைத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வைப் போன்று இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், மின்சார தட்டுப்பாட்டைச் சமாளிப்பது எப்படி? தமிழக அரசின் சூரிய மின்சக்தி கொள்கை போன்றவை தொடர்பான கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக அவர்கள் கூறினர். குரூப் 1 பிரதானத் தேர்வில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு மிகவும் யோசித்து எழுத வேண்டியிருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். இந்தத் தேர்வு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெற இருக்கிறது.
No comments:
Post a Comment