Friday, 25 October 2013

ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந் ததும், தேர்வர்களுடைய ஆவணங்கள் அனைத்தும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு கொண்டு வரப்படும்.
பின், அதிகாரிகள் அடங்கிய குழு, ஒவ்வொரு தேர்வரின் சான்றிதழ்களையும், ஆய்வு செய்யும். இந்தப் பணிகள் முடிவதற்கே, பல நாட்கள் ஆகிவிடும். இந்நிலையில், 23, 24ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 மையங்களில், முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில், வழக்கத்திற்கு மாறாக, புதிய முறையை, டி.ஆர்.பி., கையாண்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மையத்திற்கும், சி.இ.ஓ., தலைமையில், நான்கு அலுவலர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பொறுப்பு ஏற்கச் செய்தது. தேர்வர்களுடைய சான்றிதழ்களை, மையத்தில் உள்ள பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்து முடித்ததும், அது குறித்த விவரங்களை, அங்கே இருந்தபடி, டி.ஆர்.பி., இணையதளத்தில், அப்லோட் செய்தனர். மேலும், தேர்வர்களின் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், ஆசிரியர் பணிக்கு, தகுதியானவர் என்றும், தேர்வு செய்யப்பட்ட தேர்வரின் ஆவணத்தில், சி.இ.ஓ., உட்பட, நான்கு பேரும் கையெழுத்திட்டு, அதன் நகலை, தேர்வர்களுக்கு வழங்கவும், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம், டி.ஆர்.பி., அலுவலகத்தில், மீண்டும் ஒரு முறை தனியாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்காது. நேரடியாக, தேர்வுப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்படும். அதே நேரத்தில், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், சி.இ.ஓ., உள்ளிட்ட நான்கு அலுவலர்களை பொறுப்பேற்கச் செய்திருப்பதை நினைத்து, அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்வு செய்யப்படும் ஆசிரியரில், யாராவது பின்னாளில், தகுதியற்றவர்களாக கண்டுபிடிக்கப்பட்டால், சான்றிதழை சரிபார்த்த, நான்கு அலுவலர்கள் மீதும், துறை ரீதியாக, கடும் நடவடிக்கை எடுப்பதற்கு, டி.ஆர்.பி., வழிவகை செய்துள்ளது. இது, எங்களுக்கு, தேவையற்ற, டென்ஷனை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment