Sunday 22 September 2013

50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு-தமிழக அரசு உத்தரவு

தற்போதுள்ள 50 நடுநிலை பள்ளிகளை உயர் நிலை பள்ளிகளாக உயர்த்த தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2, திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நடுநிலை பள்ளிகள் அடங்கும். தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 5 கி.மீ தொலைவிற்குள் உயர்நிலைப் பள்ளிகள் இல்லாத பகுதிகளில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலை பள்ளிகளுக்கு தலா 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. மேலும், தரம் உயர்த்தப்படும் 50 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தப்படுகிறது. 50 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை, உயர் நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 1 முதல் 5 வகுப்புகள் தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யப்படுவதால், அந்த பள்ளிகளுக்கு தலா ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. புதியதாக உருவாக்கப்பட உள்ள அல்லது நிலை உயர்த்தப்படவுள்ள 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 50 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பணிநிரவல் மூலமாக நிரப்பிக் கொள்ளப்பட வேண்டும். தரம் உயர்த்த கருதப்படும் 50 பள்ளிகளுக்கு, புதியதாக உருவாக்க அல்லது நிலை உயர்த்திட 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான செலவினை ரெட்ரோ பன்டிங் அடிப்படையில் மத்திய அரசின் உதவியை பெற அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். புதியதாக 50 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான செலவிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உதவியை பெற மாநில திட்ட இயக்குநர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment