Monday 23 September 2013

அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மூதாட்டியை ரோட்டில் வீசிய நர்சுகள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது துவரங்குறிச்சி. இப்பகுதியில் உள்ள மோர்னிமலை என்ற பகுதியில் நேற்று முன்தினம் மாலை சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கை, கால்களில் புண்களுடன் வேதனையில் முனகியவாறு கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி அங்கு வந்தார் என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.
இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் அப்துல் மாலிக்கிற்கு தகவல் அளித்தனர். அவர் அங்கு விரைந்து சென்று அந்த மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த மூதாட்டியை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த 2 நர்சுகள் வீல் சேரில் வைத்து மருத்துவமனைக்கு வெளியே கொண்டு சென்றுள்ளனர். பக்கத்து படுக்கையில் இருந்தவர்களும் மேல்சிகிச்சைக்காக வேறு வார்டுக்கு அழைத்து செல்கிறார்கள் என்று நினைத்து இருந்துவிட்டனர். ஆனால் அந்த நர்சுகள் ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டிக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் அவரை அங்கிருந்து வெளியேற்ற முடிவு செய்து ரோட்டில் வீசி சென்றனர்.
சிறிது நேரம் கழித்து அப்பகுதியில் செல்லும் 4 வழிச்சாலையில் உள்ள மேம்பாலம் அருகில் உள்ள புளியமரத்தின் கீழ் அதே மூதாட்டி மீண்டும் முனகியவாறு கிடந்துள்ளார். அவ்வழியே சென்றவர்கள் இதைக்கண்டு மீண்டும் பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் மற்றும் துவரங்குறிச்சி போலீசார், தாசில்தார் சுலோச்சனா ஆகியோருக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த அவர்கள் மூதாட்டியை மீட்டு மீண்டும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அந்த மூதாட்டி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் மிகவும் அலட்சியமாக பணியாற்றுவதாகவும், நோயாளிகளிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவர்களின் அலட்சியத்தால் விபத்தில் சிக்கிய ஏராளமானோர் உயிரிழப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இங்கு பணியாற்றும் அனைவரையும் கூண்டோடு மாற்றினால்தான் இந்த மருத்துவமனையில் பொதுமக்கள் முழுமையான சேவையை பெற முடியும் என்கின்றனர் பொதுமக்கள்.
எனவே மூதாட்டியை ரோட்டில் வீசிச்சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment