Tuesday 22 October 2013

கிராபைட் கண்டுபிடிப்பு : தினம் ஒரு தகவல்

பென்சிலின் மத்தியில் இருக்கும் கருப்பு நிற குச்சியை ‘கிராபைட்’ என்று அழைக்கப்படுகிறது. ஓவியர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரிதும் பயன்படும் இந்த ‘கிராபைட்’ கண்டுபிடிக்கப்பட்ட கதை மிகவும் சுவாரசியமானது. சமீபத்தில் இந்தியாவை தாக்கிய ‘பைலின்’ புயல் போன்ற மிகப்பெரிய புயல் ஒன்று 1550–ம் ஆண்டு இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியை தாக்கியது. அந்த பகுதியில் இருந்த ‘கம்பர்லாண்ட்’ என்ற இடத்தில் ஒரு நாள் இரவில் அந்த புயல் பலம் வாய்ந்த மிகப்பெரிய மரங்களையெல்லாம் சாய்த்து விட்டது.
மறுநாள் ஆடுகளை மேய்க்க போனவர்கள் ஏராளமான மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்திருப்பதை பார்த்தார்கள். பெரிய மரங்கள் என்பதால் மரம் சாய்ந்த இடத்தில் ஆழத்தில் இருந்த மண் எல்லாம் பூமிக்கு மேலே வந்து விட்டன. அப்போது ஆழத்தில் இருந்து மேலே வந்த மண்ணில் கன்னங்கனேரலென்று ஏதோ ஒன்று தெரிவதை பார்த்தார்கள். அது நிலக்கரியாக இருக்கும் என்று நினைத்து எரித்துப்பார்த்தார்கள். அது எரியவில்லை. தொட்டால் கையில் ஒட்டிக்கொண்டது. அது என்னவென்று தெரியாத ஆடுமேய்க்கும் சிறுவர்கள் இதைப்பற்றி இங்கிலாந்து அரசுக்கு தெரியப்படுத்தினர்.
சில நாட்களில் அங்கு அரசாங்க அதிகாரிகள் கூடிவிட்டனர். அது மதிப்புள்ள ஒரு பொருளாக இருக்கக்கூடும் என்று கருதி அதற்கு கிராபைட் என்று பெயர் கொடுத்தார்கள். நாளடைவில் பீரங்கி குண்டுகளை தயாரிக்க இதை உபயோகித்தார்கள். மற்ற கரித்துண்டுகள் போல் இது வேகமாக கரையாமல் மெதுவாக கரைந்ததால் ஓவியம் வரையும் ஓவியர்கள் கிராபைட்டை தங்கள் ஓவியத்திற்கான ஸ்கெட்சை வரைவதற்கு கரித்துண்டுகளுக்கு பதிலாக கிராபைட் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.
இப்படியாகத்தான் கிராபைட் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. பின்னாளில் மரக்குச்சிக்குள் கிராபைட்டை வைத்து பென்சில் செய்யும் முறை வந்தது. இப்போதும் அதேமுறை பின்பற்றப்படுகிறது.

No comments:

Post a Comment